சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை உரையில் ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசு கொடுத்த சில பகுதிகளை தவிர்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினர் ஆங்காங்கே இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று (ஜன 14) திமுக சார்பில் சென்னை விருகம்பாக்கம் 128ஆவது வட்டத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அருவருக்கத் தக்க வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் மின் அஞ்சல் மற்றும் தபால் மூலமாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரை பெற்றுக் கொண்ட சென்னை காவல்துறையினர் இது தொடர்பாக சட்ட வல்லுநர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதன் பிறகு உரிய சட்ட பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்