சென்னை: தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. அதனைக் கொண்டுசெல்லும் போக்குவரத்தில் சிக்கல் உள்ளதாக கருத்து தெரிவித்துவந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகியவை அனுமதிக்காத நிலையில், மகாராஷ்டிர அரசு அனுமதியளித்தது. ஆனால், அங்கு உழவர்கள் திரண்டு, தொடங்கவிருந்த கட்டடத்தை அடித்து நொறுக்கினர்.
பின்னர், அதிமுக அரசிடம் உரிமம் பெற்று தூத்துக்குடியில் தொடங்கிய நிறுவனத்தில் காற்று, நீர், நிலம் அனைத்தையும் மாசுபடுத்தி, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தியது.
இதனால் ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் 2010ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் ஆலையை மூடக்கோரி தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போதும், ஆலை மீதான தடை ஆணை நீடிக்கின்றது.
ஆயிரக்கணக்கான கோடி லாபம் ஈட்டிய ஸ்டெர்லைட் ஆலை, ஆக்சிஜன் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டு, கள்ளத்தனமாக ஆலையைத் திறப்பதற்கு முயற்சிக்கின்றது.
அதற்கு, தமிழ்நாடு அரசு இடம் தரக் கூடாது. ஆனால், அதே நேரத்தில், ஆக்சிஜன் ஆக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதால், தமிழ்நாடு அரசே அந்த ஆலையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்.
அதற்குத் தேவையான பொறியாளர்களை, பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்கனவே பணி ஆற்றிக்கொண்டு இருக்கும் பொறியாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை இயக்க அனுமதிக்கக் கூடாது" எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.