பதவி உயர்வு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், அதில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை அரசு பணியிடை மாற்றம் செய்யும் உத்தரவிற்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எட்டு மருத்துவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்ட நிலையில் அவர்களை பணியிட மாற்றம் செய்யும் உத்தரவை அரசு திரும்ப பெறவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், மீதான நடவடிக்கைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று உத்தவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: கோயில் நிலங்களின் விவரங்கள் தெரியாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது - உயர் நீதிமன்றம்!