சென்னை: உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கவலை அடைந்த விவசாயிகள் நடவுப் பணிகளுக்குத் தேவையான உரத்தைத் தடையின்றி வழங்க வேண்டி உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்த நிலையில், உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும், புகார்களைத் தெரிவிக்க விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு உதவி எண்ணை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் நெற்பயிர் 18.5 லட்சம் ஹெக்டேர் பரப்பிலும், சிறுதானியம், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்திப் பயிர்கள் சேர்த்து 46.2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுவருகிறது.
கண்காணிப்பு மையம்
இதற்குத் தேவையான உரங்கள் மாநிலத்தில் உள்ள எட்டாயிரத்து 100 தனியார் விற்பனை நிலையங்கள், நான்காயிரத்து 354 கூட்டுறவு விற்பனை மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மாதந்தோறும் மாநில அரசுக்குத் தேவையான மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடுசெய்யப்படுகிறது.
ஒதுக்கீடுசெய்யப்பட்ட உரங்கள் சுமார் 15 உர நிறுவனங்கள் வாயிலாக மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் உரம் வழங்குதல், உர நகர்வு, உர கண்காணிப்பு, தரப் பரிசோதனை முதலான பணிகள் மாவட்ட அளவிலான வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) கண்காணிக்கப்படுகிறது.
இது தவிர விவசாயிகளுக்கு உரம் தொடர்பான கோரிக்கைகள், புகார்களைத் தெரிவிக்கவும், அதனை நிவர்த்திசெய்யவும் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் தீர்வு வழங்க
மேலும், முதலமைச்சர் உத்தரவுப்படி மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும், புகார்களைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்வதற்காகவும் உர உதவி மையம், சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் பதிவுசெய்திடலாம். விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களைப் பதிவுசெய்து உடனுக்குடன் தீர்வு வழங்குவதற்காக அலுவலர் ஒருவரும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே, வேளாண் பெருங்குடி மக்கள் உரம் தொடர்பான தகவல்கள், புகார்களை 9363440360 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு வாய்மொழியாகவும், வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் தெரிவித்துப் பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: VIRAL VIDEO: தாலி கட்டுறது முன்னாடி இப்படி ஒரு பிரச்சினையா?