சென்னை: அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 2021-22ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கு 25 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் வழங்க வேண்டிய 364 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு கீழ் உள்ள பெற்றோரின் குழந்தைகள், பள்ளிக்கல்வித் துறையின் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் துவக்க நிலை வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் 8 ம் வகுப்பு வரையில் படிப்பதற்கான கட்டணத்தை அரசு வழங்குகிறது.
மேலும் நர்சரி, பிரைமரி பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அந்தப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரையில் அரசு தரப்பில் கட்டணம் வழங்கப்படுகிறது. அவர்கள் 6 ம் வகுப்பு முதல் வேறுப் பள்ளிக்கு மாறிச் செல்லும் போது இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டணம் வழங்கப்படுவது இல்லை.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கைக்கான கட்டண நிலுவைத் தொகை இருப்பதால், வரும் கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டி இருக்கும் என தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், "கடந்த 2021- 2022 ஆம் ஆண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் துவக்க நிலை வகுப்புகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையான 364 கோடியே 43 லட்சத்து 82 ஆயிரத்து 406 ரூபாயை விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
2021-2022 ம் ஆண்டு துவக்க நிலை வகுப்புகளில் அனுமதிக்கப்பட்ட 3லட்சத்து 98 ஆயிரத்து 393 மாணவர்கள் இதன் மூலம் பயனடைய உள்ளனர். எல்கேஜி, யூகேஜி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் நர்சரி, பிரைமரி பள்ளிகளில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 283 பேரும், 1 முதல் 8ம் வகுப்பு வரை மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 25 ஆயிரத்து 110 மாணவர்களும் பயன்பெறுகின்றனர்.
மேலும் 2022-23 ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்ற என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேஸ் குடு பாத்துக்கலாம்.! துப்பாக்கி காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்