வங்கக்கடலில் உருவாகி மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்த ஆம்பன் புயலால் வட தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாள்களாக வெப்பக்காற்று வீசிவருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெயில் அதிகரித்துக் காணப்படும்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும் என்பதால் அடுத்துவரும் இரண்டு நாள்களுக்கு விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 வரை திறந்தவெளியில் வேலைசெய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த ஐந்து நாள்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இரண்டு மாநிலங்களில் வெப்ப அலை சுட்டெரிக்கும்' - எச்சரித்த ஐஎம்டி!