சென்னை: மாண்டஸ் புயலால் பாதிப்படைந்த சென்னை சின்ன நீலாங்கரை, பெரிய நீலாங்கரை குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். சின்ன நீலாங்கரை, உத்தண்டி நைனார் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் அரிப்பால் சேதமான சாலைகள் மற்றும் வீடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாண்டஸ் புயலால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றார். அரசு திறமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பாமக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டியதாக தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "மாண்டஸ் புயலால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
விரைவில் நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாகவும், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மீனவ குப்பங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தூண்டில் வளைவு, மதில் சுவர், குறுக்கு சுவர் போன்றவற்றை அமைத்து தரப்படும் என்றார். மாண்டஸ் புயலால் சேதமடைந்த படகுகளுக்கு, சேதத்தின் அளவுக்கு ஏற்றார் போல் பேரிடர் நிவாரணம் வழங்கப்படும்" என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி..? முதலமைச்சர் முடிவு..!