திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் தேர்தல் பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். அம்பத்தூரில் மகளிருடன் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசுகையில், “பெண்கள் வாழ்வில் வளர்ச்சி பெற மகளிர் சுய உதவி குழுக்கள் வழியாக வங்கிகள் மூலம் 89 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழும் பெருநகரமாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்திய மாநிலங்களில், தமிழ்நாட்டில்தான் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என ஒரு நாளேடு சான்று வழங்கியுள்ளது. நாட்டிலேயே தமிழ்நாடுதான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது.
கரோனா நடவடிக்கை
நகரம் முதல் கிராமம்வரை ஒவ்வொரு பகுதியிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறோம். இந்தியாவிலேயே அதிக ஆய்வகம் மூலம் அதிக பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடுதான். இன்று படிப்படியாக தொற்று நோய் குறைய ஆரம்பித்திருக்கிறது.
தொழில் வளர்ச்சி
தமிழ்நாட்டில்தான் மகளிருக்கு என தொழில் பூங்கா உள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்று 304 தொழில் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதன் காரணமாக 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இலவச மின்சாரம்
ஒவ்வொரு வீட்டிற்கும் 100 யூனிட்வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு வீட்டிற்கும் மாதந்தோறும் 250 ரூபாயும் ஆண்டுக்கு சுமார் 8 ஆயிரம் ரூபாயும், 5 ஆண்டுக்கு 40ஆயிரம் ரூபாய் வரை மக்கள் பயன் பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு
தமிழ்நாட்டிற்கு 16 விருதுகள் கிடைத்துள்ளன. சுகாதாரத் துறை, போக்குவரத்து துறை, உள்ளாட்சித் துறை, கல்வித்துறை, மின்சாரத் துறை, சமூகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விருதுகளை தொடர்ந்து பெற்று வருகிறோம். இந்தியாவிலேயே விருதுகளை பெறும் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” என்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் பதவியை சசிகலாவுக்கு திருப்பி அளிக்கும் விளம்பரமா? ஓபிஎஸின் வியூகம் என்ன?