இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு மருத்துவப் பணி செய்துவரும் ஃபோர்டிஸ் நிறுவனம் சென்னை வடபழனியில் புதிதாக ஒரு மருத்துவமனையை கட்டமைத்துள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், ஃபோர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவன மேலாண்மை இயக்குநர், மற்றும் நிறுவனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "ஃபோர்டிஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளை நிறுவி மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கி வருகிறது. முன்னதாக சென்னை அடையாறில் இந்நிறுவனத்தின் கிளை இயங்கிவருகிறது. தொடர்ந்து வடபழனியிலும் இதன் கிளை நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது, இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் தமிழ்நாடு என்பதை வலுவாக்கும் விதமாக அமைந்துள்ளது.
நலமான மாநிலமே வளமான மாநிலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு தரமான உயர்தர மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவமனை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாகவே, தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக கல்லூரிகள் தொடங்கப்படும். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் கூடுதலாக மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை உண்டாகும் " எனத் தெரிவித்தார்.