சென்னை: தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள நிலக்கரியை கையாளும் இரு இயந்திரங்களை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள துறைமுக தளம் 1-ல் 325 கோடி ரூபாய் செலவில் அதிக திறன் கொண்ட இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தற்போது, தூத்துக்குடி துறைமுகம் தளம்-1 மற்றும் தளம் 2–ல் நிலக்கரியை கையாள்வதற்கு சுமார் 50,000 மெட்ரிக் டன் முதல் 55,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிரேனுடன் கூடிய சிறிய கப்பல்கள் மாதம் ஒன்றிற்கு 10 முதல் 12 வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதிக அளவு நிலக்கரியை குறுகிய காலத்தில் கையாள்வதற்காகவும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் முழு அளவில் மின் உற்பத்தியை தங்கு தடையின்றி நடைபெறுவதற்காகவும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், 70,000 மெட்ரிக் டன் முதல் 75,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்களிலிருந்து நிலக்கரியை விரைவாக இறக்குவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு அதிக திறன் கொண்ட இரு நிலக்கரி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இப்புதிய இயந்திரங்கள் வாயிலாக குறுகிய காலத்தில் 6 முதல் 8 பெரிய கப்பல்கள் மூலம், கப்பல் ஒன்றிற்கு 70,000 டன் முதல் 75,000 டன் வரை அதிக கொள்ளளவு நிலக்கரியை இறக்க முடியும் என்றும் இதன் மூலம் நிலக்கரியை கையாளும் சரக்குக் கட்டணம் டன் ஒன்றிற்கு 700 ரூபாயிலிருந்து 540 ரூபாயாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆண்டுக்கு சுமார் 80 கோடி ரூபாய் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சேமிப்பாகக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகப்படியான மின் உற்பத்தி அனல் மின் நிலையங்களில் இருந்து கிடைக்கப் பெறுகிறது. நிலக்கரியை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது நிலக்கரியை கையாளும் இயந்திரங்கள் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் துவக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புது ரூட்டில் பயணிக்கும் ஈபிஎஸ்.. ஈரோடு கிழக்கு வியூகம் என்ன?