சென்னை: தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வரும் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். மேலும், பாடகி பி.சுசீலாவிற்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவிலேயே இசைக்கென்று உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த பல்கலைக்கழகத்திற்கு உண்டு. மேலும் மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படும் இந்த பல்கலைக்கழகத்தில் கூடுதல் சிறப்பாக மாநிலத்தை ஆளுகின்ற முதல்வரே இந்த பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக இருக்கும் உரிமை உள்ளது. இப்படி மாநிலத்தை ஆளுகின்ற முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக இருந்தால் தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும்.
மற்றவர்களின் கையில் இருந்தால் அதனுடைய நோக்கமே சிதைந்து போய் விடும் என்று எண்ணித்தான் கடந்த 2013 ம் ஆண்டே இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதல்வர் தான் என அன்றைய தமிழக முதல்வராக இருந்த டாக்டர்.ஜெ.ஜெயலலிதா முடிவு செய்தார். இதற்காக ஜெயலலிதாவை மனதார நாம் பாராட்ட வேண்டும். இப்போது இருக்கக்கூடிய நிலையை நினைத்து நானும் அவரை மனமுவந்து பாராட்டுகிறேன்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருக்கும் நான் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பதினால் தான் மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் இந்த பட்டமளிப்பு விழாவில் இரண்டு இசை மேதைகளுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கும் முடிவுகளை எடுக்க முடிகிறது என்றார்.
அதனால் தான் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வேந்தர்களாக முதல்வரே இருக்க வேண்டும் என கூறி வருகிறோம். அதற்காகத் தான் சட்டம் முன் வடிவுகளையும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற இருக்கிறோம். இது தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நல்ல முடிவு வர வேண்டும் எனவும் எதிர்பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ஊழல் புகார் கூறிய பிறகு அண்ணாமலை ஆளையே காணவில்லையே..” - ஜோதிமணி எம்பி!