பாஜக தலைமை இருக்கும் கமலாலயம் மதிப்பு ரூ.30 கோடி எனவும், அதை 3 கோடி ரூபாய்க்கு மிரட்டி வாங்கியுள்ளனர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜர் அரும்பாடுபட்டு உருவாக்கித்தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் சொத்துக்கள் தவறான வழிகளில் பயன்படுத்த முயற்சிப்பதை சுட்டிக்காட்டிய காரணத்தினால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகம் இயங்கும் இடத்தை ரூ.30 கோடி மதிப்புள்ளதென்றும் அதை ரூ.3 கோடிக்கு மிரட்டி வாங்கினார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய விலையையும், இப்போதிருக்கிற சந்தை மதிப்பையும் ஒன்றுபடுத்திப் பேசியிருப்பது, அவர் எத்தகைய குழப்பத்திலிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும் அதனை ரூ.30 கோடி என்று எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்தார் என்று தெரியவில்லை.
அவர் குறிப்பிட்டுள்ளபடி ரூ.30 கோடிக்கு நாங்கள் இடத்தைக் கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் இடத்தை அவர் வாங்கிக்கொள்ள தயாரா, மேலும் முக்தா சீனிவாசன் அவர்களின் மகன் முக்தா சுந்தர் முக்கிய பொறுப்பில் பாஜகவில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இடத்தை வாங்கும்பொழுது முக்தா சீனிவாசன் காங்கிரஸின் முக்கியத் தலைவராக இருந்தார் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கமலாலயத்தை வாங்க எங்களிடம் பிஎம் கேர் ஃபண்ட் இல்லை - கே.எஸ்.அழகிரி