சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் பருவமழையின் போது சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2020-2021 ஆண்டுக்கான நிதியில் இருந்து சிதலமடைந்த சாலைகளை சுரண்டி எடுத்துவிட்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, சில இடங்களில் சாலைகள் சுரண்டாமல் பழைய சாலையின் மீது புதிய சாலை போடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். முறைகேடு நடைபெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
முறைகேடு
இந்தநிலையில் கிழக்கு தாம்பரம் சுந்தரம் காலனி பெரியாழ்வார் தெருவில் 39 லட்சம் ரூபாய் செலவில் 400 மீட்டர் துாரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு தலைமைச் செயலாளரின் உத்தரவை மீறி, சாலை அமைக்கும் தனியார் ஒப்பந்ததாரர் சுமார் 50 மீட்டர் தூரம் வரை பழைய சாலையை சுரண்டாமல், ஏற்கனவே இருந்த பழைய சாலையின் மீது புதிய சாலை அமைத்து உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குற்றச்சாட்டு
இதுகுறித்து கேட்டபோது தனியார் ஒப்பந்ததாரர் மிரட்டுகிறார் என்றும், மாநகராட்சி பொறியாளர் ஆனந்த ஜோதியும் பொதுமக்களின் குற்றச்சாட்டை ஏற்காமல் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக பேசுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, "எங்கள் பகுதியில் இருந்த தார் சாலையை முழுவதுமாக சுரண்டி எடுக்காமல் ஏற்கனவே இருந்த பழைய சாலையின் மீது புதிய சாலையை அமைத்துள்ளனர். இதனால் சாலையின் மட்டம் உயர்ந்துள்ளது. ஏற்கனவே இருந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால், மழைக்காலங்களில் வெள்ளநீர் வீட்டிற்குள் புகுந்து மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சாலையை அரைகுறையாக அமைக்கின்றனர். இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என அலட்சியமாக கூறுகிறார்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்து உள்ளோம், ஆணையர் தகுந்த ஆய்வு மேற்கொண்டு பழைய சாலை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிட்டு புதிய தார்சாலை அமைக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்: நாஞ்சில் சம்பத், நெல்லைக் கண்ணன், பாரதி பாஸ்கர் ஆகியோருக்கு அறிவிப்பு