சென்னை: தாட்கோ திட்டத்தின்கீழ் பட்டியல் சமூகத்தினர், பழங்குடி வகுப்பினருக்கு மானிய விலையில் ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இத்திட்டத்தின்படி வாகன விலையில் 30 விழுக்காட்டுத் தொகையை அரசு மானியமாகவும், 65 விழுக்காட்டுத் தொகை குறைந்த வட்டியில் கடனாகவும் வழங்கப்படுகிறது.
ஐந்து விழுக்காடு வாகன விலையை மட்டுமே பயனாளர் செலுத்தினால் போதும். இதனால் இத்திட்டத்தின்கீழ் பலரும் ஆர்வமுடன் பதிவு செய்துவருவதாக ஆதி திராவிடர், சமூகநலத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் என்பது ஆதிதிராவிடர்களின் நில உரிமை பெறவும் சமூகப் பொருளாதார முன்னேற்றம் அடையவும் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திவருவது.
தாட்கோ திட்டத்தின்கீழ் மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், தொழில்முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சமூகநலத் துறையின் மண்டல ஆய்வுக் கூட்டம்
ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள பட்டியல் சமூகம், பழங்குடி வகுப்பினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிடர், சமூகநலத் துறையின் மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை - தமிழ்நாடு அரசு அரசாணை