சென்னை: மிகப்பெரும் வர்த்தக நகரான சென்னை - தியாகராய நகருக்கு சென்னைவாசிகள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பண்டிகை காலங்களில் இங்குள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்கள் தியாகராய நகருக்கு படையெடுப்பதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதற்குத் தீர்வு காணும் வகையில், 2018ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஆகாய நடை பாதைத் திட்டம் ரூ.28.45 கோடி ரூபாய் செலவீட்டில் முழுமை அடைந்திருக்கிறது. இந்த உயர்மட்ட நடை மேம்பாலத்தின் மூலமாக ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகியப் பகுதிகளில் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையத்துக்கு இந்த நடைமேம்பாலம் வழியாக, இனி பொதுமக்கள் எளிதாகச் செல்ல முடியும்.
நாட்டிலேயே நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நீளமான உயர்மட்ட நடைமேம்பாலம் இதுவாகும். 570 மீட்டர் நீளமும், 4.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மேம்பாலத்தின் இரண்டு புறமும் ஒரே நேரத்தில் 8ல் இருந்து 10 பேர் செல்லும் வகையில் மின் தூக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து மேம்பாலத்திற்கு வருவோருக்கு நகரும் படிக்கட்டுகள், மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகள், மாம்பலம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பான்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பாலத்தை அடுத்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பாலம்: வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே ஐசிஎப் சாலை மற்றும் கொளத்தூர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 500 மீட்டர் நீளத்தில் ரூ.62 கோடி செலவில், சென்னை மாநகராட்சி சார்பாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் ஐசிஎப், கொளத்தூர் ஜிகேஎம் காலனி, கொரட்டூர், பாடி, பெரம்பூர் பகுதி மக்கள் பயன்பெறுவர். மே 13ம் தேதி இந்த மேம்பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
இதுமட்டுமின்றி ஸ்டீபென்சன் சாலை அருகே ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே, கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.43 கோடி செலவில் 282 மீட்டர் நீளம் மற்றும் 22 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் ஜூன் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: யானை தாக்கி விவசாயி பலி - யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறை தீவிரம்!