ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஊழியர்கள் ஊதிய குறைப்பை கண்டித்து கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க வந்த ஸ்விக்கி ஊழியர்கள், தங்களது கோரிக்கை மனுவை திமுக நிர்வாகி பூச்சி முருகனிடம் அளித்தனர்.
பின்னர் ராஜிவ் காந்தி என்ற ஸ்விக்கி ஊழியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஆரம்பகட்டத்தில் நான்கு கிலோ மீட்டர் தொலைவுக்கு 36 ரூபாயாக வழங்கப்பட்ட ஊதியம், தற்போது குறைக்கப்பட்டு 15 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. கரோனா காலத்தில் சிரமப்பட்டு உணவை டெலிவரி செய்கிறோம்.
ஆனால், உழைப்புக்கேற்ற EF, PF என எதுவும் இல்லை. நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் சராசரியாக சம்பாதித்து வந்த நிலையில், தற்போது 300 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடிகிறது. இதில், பெட்ரோல் செலவு போக வெறும் 45 ரூபாய் வரைதான் கையில் தங்குகிறது. ஊதிய குறைப்பால் எங்களது வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: திருநெல்வேலி கொண்டுவரப்பட்ட தனிப்படை காவலர் உடல்!