சென்னை, அசோக் நகர் 7ஆவது தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். பாலாஜி நேற்று இரவு 10 மணி அளவில் "ஸ்விக்கி" ஆன்லைன் நிறுவனம் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதை பாலாஜி வீட்டிற்கு டெலிவரி செய்ய ராஜேஷ் கண்ணா என்கிற ஊழியர் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ஊழியர் ராஜேஷ் கண்ணாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, ஆர்டரைத் தவிர்க்க முடியாமல் அவரின் தந்தை தனசேகரனை வாடிக்கையாளர் பாலாஜியின் வீட்டிற்கு டெலிவரி செய்ய உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் ராஜேஷ் கண்ணா சற்று கால தாமதமாக பாலாஜியிடம் உணவு கொடுத்துள்ளார்.
ஆனால் பாலாஜி 'இவ்வளவு நேரம் தாமதமாக ஏன் வந்தாய்' என்று கேட்டு ராஜேஷை திட்டியுள்ளார். தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்த ராஜேஷின் தந்தை தனசேகரன் பாலாஜியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, அங்கு வந்த பாலாஜியின் மேலாளர் ஜெயராஜ் திடீரென ராஜேஷை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதையடுத்து, அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ராஜேஷ் அருகில் இருந்த டெலிவரி ஊழியர்கள் மூன்று பேரை தகராறு நடந்த இடத்திற்கு வரவழைத்து, உணவு ஆர்டர் செய்த பாலாஜியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதையடுத்து, பாலாஜி அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகளை டெலிவரி ஊழியர்கள், பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, அசோக் நகர் காவல் நிலையத்தில் பாலாஜி புகார் அளித்தார். பின்னர் அதன்பின், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜேஷ் கண்ணா, அவரது தந்தை தனசேகரன், டெலிவரி ஊழியர்கள் சீனிவாசன், மதியழகன், ஜெயசூர்யா ஆகிய ஐந்து பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்விக்கியில் கைதிகள் உணவு விற்பனை: கேரளா அதிரடி