சென்னை அடையார் பஸ் டெப்போவிலிருந்து பெசன்ட் நகர் செல்லும் சாலை காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகமாகவே காணப்படும். இந்நிலையில் நேற்று இரவு இங்குள்ள சிக்னல் இரவு 9:30 மணிக்கு மேலாக வேலை செய்யவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சரிசெய்ய போக்குவரத்து காவலர்கள் யாரும் நிகழ்விடத்தில் இல்லாததால் நிலமை சிக்கலானது.
அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு ஆர்டர் வாங்க வந்த ஸ்விகி நிறுவன ஊழியர், அதிரடியாக இறங்கி போக்குவரத்தை சரி செய்யும் வேலையில் இறங்கினர். அவருடன் இணைந்து ஸ்விகி நிறுவன ஊழியர்கள் சிலர் போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்தில் போக்குவரத்து சீரானது. அதன் பிறகு காவல் துறையினர் வந்து போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இளைஞர்கள் மேற்கொண்ட இந்த பணியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
மேலும், இந்த காட்சிகளை செல்ஃபோனில் படம்பிடித்த இளைஞர்கள் அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். வீடியோவை பார்த்த பலர் தங்களின் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: துருக்கி நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி!