டெல்லி : தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க மாநில அரசு விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம், தி கேரளா ஸ்டோரி. கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளை ஒரு இஸ்லாமிய பெண் மூளைச் சலவை செய்து இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றி, தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் குழுப்பில் இணைப்பது போன்று தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கதையாக்கப்பட்டு உள்ளது.
திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் மீது பயங்கர விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் கடந்த மே 5ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
மாநிலத்தின் பாதுகாப்பு, வெறுப்பு மற்றும் வன்முறைகளை தவிர்ப்பது மற்றும் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக தி கேரளா ஸ்டோரி திரைபடத்திற்கு தடை விதிப்பதாக மநில அரசு தெரிவித்தது. அதேபோல் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாதுகாப்பு கருதி பல்வேறு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட முன்வரவில்லை.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் படத்தின் மீது மறைமுகமாக தடை விதிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தவும் படக்குழு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் தலைமையிலான அமர்வு படத்திற்கு தடை விதிப்பதற்கான காரணங்களை குறித்து அறிக்கை அளிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கும், மறைமுக தடை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த அறிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், படத்திற்கு தடை விதிக்க அரசு கூறிய காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதாக தெரியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் படம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் கடைமை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பொது சகிப்புத் தன்மை இன்மைக்கு உயர் மதிப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அப்படி பார்க்கையில் அனைத்து படங்களும் அந்த வரிசையில் இடம் பெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மேற்கு வங்க அரசு விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் கூறினர். மேலும், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட முன்வரும் திரையரங்குகளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : நியூயார்க் காவல் துறையை கலக்கும் இந்தியப் பெண்... யாருக்குமே கிடைக்காத அங்கீகாரம்!