சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த விதிகளை வகுக்கக்கோரி வழக்குரைஞர் வி.பி.ஆர் மேனன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "2018 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட சொத்து வரியை நிறுத்தி வைத்தது ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு நேரில் ஆஜராகி பதிலளிக்க, சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை துணைசெயலாளர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர்.
பின்னர் விசாரணையின் போது, சென்னையில் கூவம் அடையாறு, பங்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் மாசு ஏற்படுவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்தும், கழிவுநீர் சுத்திகரிப்பது நிலையங்கள் அமைப்பது தொடர்பாகவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை மூலம் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் பதிலளித்தார்.
கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக 400 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளபட உள்ள திட்டத்திற்கு, 30 நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை அப்புறப்படுத்துவது 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, மத்திய வீட்டுவசதித் துறை செயலாளர் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மாநகராட்சி சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, 30 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்கவும், அந்த அறிக்கை மீது தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மத்திய கிழக்கிலும் ஊடுருவிய கொரோனா: இருவர் உயிரிழப்பு