பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் திறனறிவு தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பதற்கு ஆண்டிற்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்காக இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் இந்தத் திறனறித் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத் திறன் தேர்வும், அதனைத் தொடர்ந்து 11:30 மணி முதல் ஒரு மணி வரை படிப்பறிவு தேர்வும் நடைபெற உள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வகுப்பறைக்கு 10 மாணவர்கள் தேர்வு எழுத அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் மத்திய சென்னை கல்வி மாவட்டத்திற பெற்ற புனித அந்தோனியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மாணவர்களுக்கு சானிடைசர் வழங்கி, தட்பவெப்ப பரிசோதனை மேற்கொண்ட பின்னர் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். புனித அந்தோனியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 99 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் தேர்வினை எழுதினர்.