சென்னை: ஆவடியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று (ஜன.06) மதியம் கல்லூரியை முடித்துவிட்டு சக கல்லூரி நண்பர்களுடன் 21 எண் கொண்ட பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள பல்லவன் மேம்பால சிக்னலில் இறங்கியுள்ளார்.
அப்போது அங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் பீர் பாட்டிலுடன் 'பச்சையப்பாஸ் காலேஜ் ஜே' என்று கூச்சலிட்டு வந்த நிலையில், அருகில் இருந்த நியூ கல்லூரி மாணவர் ஒருவரின் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர் காயமடைந்த மாணவரை மீட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த மாணவனை விடாமல் துரத்திச் சென்ற கும்பல் சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் கையில் வைத்திருந்த பீர் பாட்டில் மற்றும் சில ஆயுதங்களை தூக்கி வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர், அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை பிடிக்கச் சென்றபோது நாலாபுறமும் சிதறி மெட்ரோ ரயில் நிலையம் வழியாக தப்பியோடிவிட்டனர். 15 கல்லூரி மாணவர்கள் மட்டும் பிடிபட்டனர்.
பின்னர் பிடிபட்ட மாணவர்களிடம் சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நியூ கல்லூரி மாணவர் ஒருவரிடம் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் கெத்து காட்டுவதற்காக துரத்தி சென்று தாக்கியது தெரியவந்தது. மேலும் மோதலுக்கான காரணம் வேறு ஏதும் உள்ளதா? என்ற கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுபானம் தர மறுத்த முதியவர் பாட்டிலால் அடித்து கொலை