தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான, கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம் பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டடவியல் வடிவமைப்பு கல்வி நிறுவனம் இயங்கி வருகின்றன. இவற்றில் 500க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதற்கிடையே கரோனா பாதிப்பால் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வளாக கல்லூரிகளில் படிக்கும் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தாவிட்டால், வகுப்புகளில் பங்கேற்க முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான மையத்தின் இயக்குநர் நாகராஜன், அனைத்துத் துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டில் இளநிலை படிப்புகளுக்கு ரூ.3.74 முதல் ரூ.5.61 லட்சம் வரையும், முதுநிலை படிப்புக்கு 1.50 லட்சமும், ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி படிப்புக்கு ரூ.3.74 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்விக் கட்டணத்தை மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அபராதத் தொகையுடன் செப்டம்பர் 14ஆம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம். அதன்பின் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அதேபோல் கல்விக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை ஆசிரியர்கள் சரிபார்த்து பின்பு, மாணவர்களை வகுப்புகளில் அனுமதிக்க வேண்டும்.
மேலும், செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. வெளிநாட்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு கட்டணங்களை டாலர் மதிப்பில் செலுத்தும்போது அப்போதைய டாலர் மதிப்பிற்குரிய சான்றிதழையும், வரையோலையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை!