கரோனா அச்சுறுத்தல் காரணமாக இறுதியாண்டு தேர்வைத் தவிர அனைத்து தேர்வுகளையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. மேலும், தேர்வுக் கட்டணம் செலுத்திய அரியர் தேர்வு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் பதிலளித்த தமிழ்நாடு உயர் கல்வித்துறை, அனைத்துப் பல்கலைக்கழகங்களிடமும் ஆலோசித்த பிறகும், மாணவர்களின் நலன்கருதியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தது. மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியில் காணொலி மூலமாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது 200க்கு மேற்பட்ட மாணவர்கள் காணொலியில் நுழைந்து நீதிமன்றப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அனைத்து வழக்குகளின் விசாரணையும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று 16ஆவது வழக்காக பட்டியலிடப்பட்டது. நீதிமன்ற விசாரணை தொடங்கியது முதல் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் கிடைக்கும் காட்சிகளை சில மாணவர்கள் சட்டவிரோதமாக யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளனர். இது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ கான்பெரன்சிங் நடைமுறைகளை வீடியோ அல்லது ஆடியோ பதிவு செய்வதோ, ஸ்கிரீன் ஷாட் எடுப்பதோ நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என ஏற்கெனவே பலமுறை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இன்று யூடியூபில் நீதிமன்ற விசாரணைகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பியது நீதிபதிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து, நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்குமா அரசு?