சமூக ஆர்வலர் ஸ்டேன் சாமி இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி லயோலா கல்லூரி முன்பு லயோலா கல்லூரியில் பணிபுரிவோர் அமைதி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜான் குமார் " 30 ஆண்டுகளாக ஜார்க்கண்டில் உள்ள பழங்குடியினரின் வளர்ச்சிக்காக வேலை செய்துவந்தார், ஸ்டேன் சாமி. அது மட்டுமில்லாமல் அவர்களது கோரிக்கை மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அவர் செய்து கொண்டிருந்தார். பழங்குடியினரின் குரலாக ஒலித்துக் கொண்டே இருந்தார்.
இவருடன் சேர்ந்து மனித உரிமை காவலர்களும் பணிபுரிந்து வந்தனர். அவரை தொடர்பே இல்லாத வழக்கில், வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் அறையை இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை சோதனை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஸ்டேன் சாமிக்கு வயது 83. அவருக்கு பல நோய்கள் உள்ளன. பிறர் உதவியில்லாமல் அவரால் எதுவுமே செய்ய முடியாது.
இந்தக் கரோனா சமயத்தில் ஏதாவது விசாரணை என்றால் ஆன்லைனில் வைத்துக் கொள்ளலாம் என்றும், அல்லது நேரில் சந்தித்துப் பேசலாம் எனவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் மறுத்து நீங்கள் நேரில் வர வேண்டும் என அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவர் மும்பை சிறையில் 23ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பழங்குடியினரால் மக்களுக்கு எந்த பிரச்னையும் வருவதில்லை. அரசாங்கம் மற்றும் பிற நிறுவனங்களால்தான் அவர்களுக்கு அதிக பிரச்னை. அதை எதிர்த்து குரல் கொடுத்ததால் இவரை கைது செய்துள்ளனர். எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் மனித உரிமை காவலர்களை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிலையை தொட்டு கும்பிடுவது போல் வெள்ளி கிரீடத்தை திருடிய பக்தர்!