சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா கோவாக்சின் தடுப்பூசியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செலுத்திக் கொண்டார். அதற்கு முன்னதாக அவருக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
தடுப்பூசியை போட்டுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "அமைச்சராக இல்லாமல் மருத்துவராகவும், இந்திய மருத்துவச் சங்கத்தின் உறுப்பினராகவும், மருத்துவர்களுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படுத்த இன்று கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி போடுவதில் எந்தவிதமான தயக்கமும் இருக்கக்கூடாது.
தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே 10 லட்சத்து 45 ஆயிரம் கோவிஷீல்ட், 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி வந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மேலும் 1 லட்சத்து, 69 ஆயிரத்து, 920 கோவாக்சின் தடுப்பு மருந்து இன்று வர இருக்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் சிரஞ்சிகள், 25 லட்சம் தயார் நிலையில் உள்ளது.
166 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 42 ஆயிரத்து, 947 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் பணியாளர்கள் இனி ஆர்வமாக தடுப்பூசி போடுவார்கள் என நம்புகிறோம்.
கோவாக்சின் இந்தியாவில் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மருத்துவர்கள் குறைவாக போட்டுக்கொள்ளும் தடுப்பூசியை நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் போட்டுக்கொண்டேன். தமிழ்நாட்டில் இதுவரை 907 பேர்தான் கோவாக்சின் எடுத்து கொண்டுள்ளனர். நான் 908ஆவது நபராக எடுத்துக்கொண்டுள்ளேன்.
தடுப்பூசியைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் அதை போட்டுக்கொள்வதில் தயக்கம் உள்ளது. அப்படி தயக்கம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் உட்பட மருத்துவத்துறையின் முக்கிய நிர்வாகிகள், மருத்துவர்கள் போட்டுக்கொள்கிறோம். மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும்” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், அமைச்சர் காமராஜர் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது .
உருமாறிய கரோனா தொற்று குறித்து சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சேலத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறித்து, பெற்றோர்கள், சுகாதாரத் துறை என பலரது கருத்து கேட்டகப்படுகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஆய்வில் பள்ளிக் குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிந்தது.
பள்ளி மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர்கள் சுகாதாரத் துறை கூறும் விதிமுறைகளை மிக கடுமையாக கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கூறினார்.