சென்னை: முதன்முறை கிடைக்கும் எதுவுமே மனதுக்கு நெருக்கமாகிவிடும். முதல் காதல், முதல் முத்தம், முதல் பயணம் என ஒவ்வொன்றும் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாதவை. அப்படிப்பட்ட முதன்முறை அனுபவம் சிலருக்கு சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஞாயிறன்று நிகழ்ந்து கொண்டிருந்தது.
ஓடி வரும் கடலை தொட்டு விளையாட, அலைகளும் அவர்களை தொட்டு முதல் ஸ்பரிசத்தை உணர்ந்து திரும்பின. எட்டிப்பார்க்கும் தூரத்தில் இருக்கும் கடலை தொட்டுவிட முடியாமல் திரும்பிய கால்கள் முதன்முறையாக மணல்பரப்பை கடந்து வங்கக்கடலை தொட்டிருந்தன. ஆம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையில் சக்கரநாற்காலிகள் மூலம் மணல் பரப்பை கடந்து கடற்கரையை அடைந்திருந்தனர்.
கடலை இவ்வளவு நெருக்கத்தில் பார்ப்பதும், அலைகளை தொட்டு உணர்வதும் இவர்களில் பலருக்கு இதுதான் முதன்முறை. இந்தியாவின் மிக நீண்ட கடற்கரையான மெரினாவில், மணற்பரப்பும் அத்தனை அகலமானது. கடற்கரை காமராஜர் சாலையிலிருந்து சுமார் 263 மீட்டர் தூரத்திற்கு 3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மரப்பாதைக்காக ரூ.1.14 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயலாக்கம் பெற்றிருக்கிறது.
மரப்பாலம் உறுதியானதாகவும், நீண்டகாலம் நீடிப்பதை உறுதி செய்யும் வகையிலும், வேலமரம், பிரேசிலின் தேக்கு ஆகியவற்றால் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
தாம்பரத்திலிருந்து கடலை காண வந்திருந்த கீதா, ஏற்கெனவே அவ்வப்போது தற்காலிக பாதைகள் அமைக்கப்பட்டதை நினைவு கூர்கிறார். இது நல்ல முயற்சிதான் என்றாலும், இத்திட்டத்தில் பராமரிப்பு முக்கியம் என கூறுகிறார். கடற்கரைக்கு செல்லும் பிரத்யேக வீல்சேர்கள் அதிக எண்ணிக்கையில் வேண்டும் என கூறும் கீதா, கழிப்பறை உள்ளிட்டவையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என வேண்டுகோள் விடுத்தார்.
ஈடிவி பாரத் நிருபரிடம் பேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை இயக்கத்தின் நிர்வாகி சதீஷ்குமார், "தற்போது அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமில்லாமல் வயதானவர்களும் நடந்து வரக்கூடும். நாற்காலி செல்லும் அளவிற்கு நிரந்தர கழிவறை, உடை மாற்றுவதற்கான அறை, வந்து செல்வதற்காக ஏதுவான வழி உள்ளிட்டவை செய்து கொடுத்தால், நிரந்தர பாதையாக முழுமை பெறும். இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறினார்.
சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரையிலும் இது போன்று பாதை அமைக்க பேசி இருக்கிறோம், விரைவில் தயாராகும் என நம்பிக்கையுடன் கூறினார். கடற்கரைக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளின் தேவை குறித்து இவரும் வலியுறுத்தினார். கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது கடற்கரை வரும் மாற்றுத்திறனாளிகளின் உதவிக்காக 3 நபர்கள் இருப்பார்கள், தற்காலிக கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இது நிரந்தரமாக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பாதையில் சிசிடிவி மற்றும் விளக்குகளும் அமைக்கப்படும் என்று கூறினார்.