சென்னை: நேற்று (மார்ச் 20) காலை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மார்ச் 21) காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 8.30 மணி அளவில் வடகிழக்கு அந்தமான் நிக்கோபார் தீவு-போர்ட்பிளேரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இதனிடையே வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், "23.03.2022 முதல் 25.03.2022 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
21.03.2022, 22.03.2022: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
21.03.2022: அந்தமான் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22.03.2022: மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
23.03.2022: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக்கடல், வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலவச லேப்டாப்கள் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி!