சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6ஆம் தேதி உருவாகும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி, 8ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்குத் திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6ஆம் தேதி உருவாகும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி, 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, அதன் பின் 8ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்குத் திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை முதல் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சூளகிரி (கிருஷ்ணகிரி) 15 செ.மீ., செய்யாறு (திருவண்ணாமலை) 12 செ.மீ., திண்டிவனம் (விழுப்புரம்) 11 செ.மீ., மணமேல்குடி (புதுக்கோட்டை), மிமிசல் (புதுக்கோட்டை), பெருங்களூர் (புதுக்கோட்டை) தலா 10 செ.மீ., பதிவாகியுள்ளது.
மேலும் குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவுப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் 10ஆம் தேதி வரை இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் 7ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் சம்பளம் தராததால் கேஸ் கம்பெனிக்கு தீ வைத்து தப்பியோடிய நபர் கைது!