இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்றினால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். நோயாளிகளுக்கு 10 கிலோ லிட்டர் வரை ஆக்சிஜன் அளிக்க வேண்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் வேகமாக குறைந்து வருகிறது. வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் உயிர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்து மத்திய அரசு தேவையான இடங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது.
இது குறித்து அகில இந்திய தொழில்துறை கியாஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் கண்ணன் கூறும் பொழுது, "தமிழ்நாட்டில்தினமும் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் இந்த உற்பத்தி போதுமானது. மேலும் அரசு தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்தி விட்டு மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு அளிக்கக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி அளவை குறைத்து 80 விழுக்காடு மருத்துவ உபயோகத்திற்கான ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் என அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பொழுது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுமா? என்பது குறித்து கூற முடியாது. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நுரையீரல் பாதிப்பின் அளவை பொருத்து நோயாளிகளுக்கு 20 லிட்டர் வரை ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் அளவை நோய்களின் பாதிப்பு அளவிற்கேற்ப குறைக்க வேண்டுமென தெரிவித்துள்ளோம்.
ஏற்கனவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் அளவிலிருந்து சற்று கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும். எனவே நோயாளிகளுக்கு எவ்வளவு ஆக்சிஜன் தேவையோ அந்த அளவில் மட்டும் அளிக்க வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் கூடத்தை உற்பத்தியை தொடங்கினால், 1000 லிட்டர் உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆலையை தொடங்கி செயல்படுத்தினால் ஆக்சிஜன் தட்டுப்பாடு வருவதை தடுக்க முடியும். உயிர்களை காப்பாற்ற முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் 3 விழுக்காடு வரை உற்பத்தி அதிகரிக்க முடியும். அதே நேரத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டால் உற்பத்தி குறையும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற தட்டுப்பாட்டை குறைப்பதற்காக தான் தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜனை அரசு வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத நிலையில் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது - காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார்