சென்னை: தேனி மாவட்டம் சின்னமன்னூரைச் சேர்ந்த சுமதி என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோது, அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தை இறந்து, பிறந்துள்ளதாக கூறியதுடன், சுமதியின் கருப்பையையும் அகற்றியுள்ளனர்.
ஆனால், மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக குழந்தை இறந்ததாகவும், மீண்டும் கருவுற முடியாத நிலை ஏற்ப்பட்டதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சுமதி புகார் அளித்தார்.
இந்த புகாரை ஆணையத்தின் உறுப்பினர் கன்ணதாசன் விசாரித்தபோது, சுமதி மற்றும் குழந்தையின் மருத்துவ அறிக்கைகள் ஆகியவை அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, சுகாதார மேம்பாட்டிற்காக தமிழக அரசு அதிகளவில் செலவு செய்யும் நிலையில், விதிகளுக்கு முரணாக மருத்துவர்கள் செயல்படுவதாக வேதனை தெரிவித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், மருத்துவ ஆவணங்களை முறையாக பராமரிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை ஆவணங்களை முறையாக பராமரிக்கும்படி சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மருத்துவக் கல்லூரி கல்வி இயக்குனர் மூலம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் சுமதிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோல்டு வின்னர் விவகாரம்; யூடியூபர் அக்ஷய்க்கு ரூ.7 லட்சம் அபராதம்.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!