சென்னை: பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் 5E தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து சின்னமலை வழியாக சென்றுகொண்டிருந்தது.
அப்போது அதே வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பேருந்தில் மோதியுள்ளார். இந்த விபத்தில் இளைஞர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் நங்கநல்லூரைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்ற ஐடி ஊழியர் என்பது தெரியவந்தது. வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையிலுள்ள பள்ளத்தில் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறி பேருந்தில் மோதியது தெரியவந்தது.
இது தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தின் காரணமாகவே முகமது யூனுஸ் பலியாகி இருப்பது தெரியவந்தது.
இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது எப்படி? அதற்கு காரணம் யார்? என விளக்கம் கேட்டு கிண்டி போக்குவரத்து காவல்துறையினர் மாநில நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்பினர்.
இந்த கடிதத்தையடுத்து சட்டவிரோதமாக டெலிகாம் கம்பெனி ஒன்று சாலையில் பள்ளம் தோண்டியதால் விபத்து ஏற்பட்டதாக கூறி மாநில நெடுஞ்சாலை துறை சம்பந்தப்பட்ட டெலிகாம் கம்பெனி மீது கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் டெலிகாம் கம்பெனி ஒன்று சின்னமலை பகுதியில் பள்ளம் தோண்டி பணிசெய்ய வேண்டுமென கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியது. அதற்கு மாநில நெடுஞ்சாலை துறை அனுமதி அளித்தது.
ஆனால் அனுமதி தந்த தேதியை மீறி சட்டவிரோதமாக அக்டோபர் 30ஆம் தேதி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மழை குறிக்கிட்டதால் சரியாக பள்ளத்தை மூடாமல் சென்றுள்ளனர் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்தில் மோதி ஐடி ஊழியர் உயிரிழப்பு