தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் இயக்கம் அமைப்பு - உயர் நீதிமன்றத்தில் பதிலுரைத்த சதுப்பு நில ஆணையம் - மத்திய அரசின் ஒப்புதல் தாமதம்
தமிழ்நாட்டில் உள்ள நூறு சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் வகையில்,மாநில அரசு முதல் முறையாக தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் இயக்கத்தை அறிவித்துள்ளதாக தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை: நாடு முழுவதும் உள்ள சதுப்புநிலங்களைப்பாதுகாக்கும் வகையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க ஏதுவாக அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு சதுப்புநில ஆணையம் சார்பில், அதன் உறுப்பினர் செயலர் தீபக் ஸ்ரீவஸ்தவா தரப்பில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டப்படி, மாநில அளவில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 100 சதுப்புநிலங்களை அடையாளம் கண்டு, அவற்றை மீட்டெடுக்கும் வகையில் 'தமிழ்நாடு சதுப்புநில இயக்கம்' என்ற அமைப்பைத் தமிழ்நாடு அரசு முதல் முறையாக அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நூறு சதுப்புநிலங்களில் 13 சதுப்புநிலங்களை ராம்சிர் சதுப்புநிலங்களாக அறிவிப்பதற்கான கருத்துருக்கள், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள 100 சதுப்புநிலங்களை, சதுப்பு நிலங்கள் பாதுகாப்புச்சட்டத்தின்கீழ், அறிவிக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறையில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்டப் பல துறைகளின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளதால், தாமதம் ஏற்பட்டதாகவும், வரைவு அறிவிப்புக்கு மாநில அரசின் ஒப்புதலைப் பெற நான்கு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு: பொதுப்படையான உத்தரவைப் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு