கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக கல்லூரிகள் தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் முதுகலை இரண்டாமாண்டு, ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று (டிசம்பர் 2) முதல் தொடங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. மேலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு தங்கள் விருப்பத்தின் பெயரில் வரலாம் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், முதுகலை இறுதியாண்டு, ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகள் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிக்கு வந்த மாணவர்களை கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் வரவேற்றனர்.
மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு வகுப்பில் ஒரு மேசைக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் விடுதிகளிலும் ஒரு அறைக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளும் கல்லூரி சார்பில் செய்யப்பட்டுள்ளன.
கல்லூரி வகுப்புகள், விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதால் விடுதி அறைகள் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணன் கூறும்பொழுது, "அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களுக்குப் பாதுகாப்புடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முகக்கவசம் அனைத்து மாணவர்கள் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் இல்லாமல் வரும் மாணவர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி தெளித்து வகுப்பறைக்குள் அனுமதிக்கிறோம். மேலும் மாணவர்கள் தங்குவதற்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு மாணவர்கள் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" எனக் கூறினார்.