தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் அக்னி நட்சத்திரம் தோன்றியிருக்கிறது. களத்தின் உஷ்ணத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச்சுழன்று பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
கட்சித் தலைவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தங்களது பரப்புரையை நம்புகிறார்களோ, அதேபோல்தான் தனது கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களின் பரப்புரையையும் நம்புவார்கள்.
கடந்த தேர்தல்களில் நட்சத்திரப் பேச்சாளர்களின் பரப்புரை முக்கிய அங்கம் வகித்தாலும், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு திமுக சார்பாக பரப்புரைக்கு களமிறங்கியதும் களம் பரபரத்தது.
அந்தத் தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட அக்கூட்டணியை வடிவேலு மேடைக்கு மேடை வெளுத்துக்கட்டினார். குறிப்பாக விஜயகாந்த்தை டார்கெட் செய்தே அவரது பேச்சு இருந்தது.
ஆனால், அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்து அதிமுக ஆட்சி அமைத்தது. அதிமுக கோட்டைக்குள் நுழைந்ததுமே வடிவேலு திரைப்படத்துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
நடுவில் ஓன்றிரண்டு திரைப்படங்களில் நடித்தாலும், அன்றிலிருந்து இன்று வரை 10 வருடங்கள் வடிவேலு வனவாசத்திலேயே இருக்கிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில்கூட “செஞ்சோற்று கடன் தீர்த்து சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா” பாடலைப் பாடினார். மேலும், அரசியல் மேடையால் தான் அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலையை சொல்லி அவர் வருத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
அதபோல், அதிமுகவிலும் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பஞ்சமில்லை. நகைச்சுவை நடிகர் செந்தில், நடிகர் எஸ்.எஸ். சந்திரன், நடிகை விந்தியா என அதிமுகவும் தன் பங்குக்கு கடந்த தேர்தல்களில் நட்சத்திரப் பேச்சாளர்களை பரப்புரை களத்தில் இறக்கி விட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்கூட ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான நட்சத்திரப் பேச்சாளர்களை அறிவித்து அவர்களைப் பரப்புரையில் ஈடுபடுத்தியது. ஆனால், நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களின் தளம் இப்போது களையிழந்திருக்கிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்யும் நட்சத்திரப் பேச்சாளர்களின் போக்குவரத்து செலவை, வேட்பாளர்களுடைய செலவுக் கணக்கில் சேர்க்காமல் இருக்க, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு 30 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கும், அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு 15 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கும், தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது.
2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும், 17 நாட்களே இருக்கின்றன. அதனால் பரப்புரை பற்றி எரிகிறது. ஆனால் போட்டியிடும் கட்சிகள் இப்போதுதான் நட்சத்திர பேச்சாளர்களின் லிஸ்ட்டை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து அனுமதி பெற்று பட்டியலை வெளியிட்டிருக்கின்றன.
அதன்படி, அதிமுக தரப்பில் நட்சத்திரப் பேச்சாளர்களாக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிமுக கலைத் துறை செயலாளரும் இயக்குநருமான ஆர். வி. உதயகுமார், கவிஞர் முத்துலிங்கம், நடிகை விந்தியா, நடிகர்கள் சரவணன், சிங்கமுத்து, மனோபாலா, சுந்தர்ராஜன், வையாபுரி, ரவிமரியா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் திமுக தரப்பில், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மகளிரணிச் செயலாளர் கனிமொழி, நாஞ்சில் சம்பத், இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேசமயம், கடந்த தேர்தல்களில் ஒரு கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு அடுத்து பரப்புரையின் முகமாக நட்சத்திரப் பேச்சாளர்கள் திகழ்ந்தார்கள். இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலோ கட்சியின் முக்கியத் தலைவர்களே பரப்புரையின் முகமாகத் திகழ்ந்து வருகிறார்கள்.
உதாரணத்திற்கு, திமுக தரப்பில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினும், அதிமுக தரப்பில் முதலமைச்சர் பழனிசாமியும் தமிழ்நாட்டை முக்கால்வாசி சுற்றி முடித்திருக்கிறார்கள். நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலோ நேற்றுதான் வெளியாகியிருக்கிறது.
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்தத் தேர்தல் மூலம் தங்களை ஒரு ஆளுமையாக நிறுவிக்கொள்ள ஸ்டாலினும், பழனிசாமியும் முயல்வதால் அவர்களே பரப்புரையின் முகமாக இருக்க விரும்புகின்றனர்.
அதுமட்டுமின்றி, நட்சத்திரப் பேச்சாளர்களை வைத்துக் கூட்டத்தைக் கூட்டலாம்; ஆனால் அதை வாக்குகளாக மாற்றுவது தற்காலத்தில் நடக்காத விஷயம்.
அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் ஃபோன் இருக்கும் இந்த காலத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களை வைத்து பரப்புரை மேற்கொள்வதைவிட அவர்களைக் கவரும் வகையில் பரப்புரையை டிஜிட்டலைஸ் செய்ய வேண்டுமென்பதில் அனைத்துக் கட்சிகளும் கவனமாக இருக்கின்றன.
முக்கியமாக இந்தத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தங்களது கொள்கைகளையும், வாக்குறுதிகளையும் முன்வைத்தே தேர்தலை சந்திக்க விரும்புகின்றன. ஆகவே இந்தத் தேர்தலில் நட்சத்திரப் பேச்சாளர்கள் பரப்புரையில் ஈடுபட்டாலும் அது ஒரு சம்பிரதாயமாகவே இருக்கும்.