சென்னை: ;சென்னை துறைமுகத்தில் கார்டிலியா குருசஸ் (Cordelia Cruises) நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடல்வழி 'எம்பிரஸ்' சொகுசு கப்பல் சுற்றுலாப் பயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 4) தொடங்கி வைத்து, அக்கப்பலை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர், சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர் பி.சந்தர மோகன், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுனில் பாலிவால், மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை 2 நாள்களும், துறைமுகம் - விசாகப்பட்டினம் - புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் வரை 5 நாட்கள் பயணம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசுக் கப்பல் இயக்கப்பட உள்ளது. இக்கப்பலில் 1,950 சுற்றுலா பயணிகள், சமையர் நிபுணர், அலுவலர்கள் என 650 பணியாட்கள் உள்ளனர்.
ஒரு நபருக்கு இரண்டு நாள் பயணக் கட்டணம் ரூபாய் 20 ஆயிரம் ஆகும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம். இக்கப்பலின் 10ஆவது மாடி, உணவகங்கள், நீச்சல் குளம், பார், திறந்தவெளி சினிமா திரையரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, ஜிம்னாசியம் போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், "பல்வேறு புதிய திட்டங்களை சுற்றுலா துறையில் புகுத்த திட்டமிட்டுள்ளோம். சுற்றுலா துறையை பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. சுற்றுலா துறையை மேம்படுத்தக் கூடிய வகையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு , மிகப்பெரிய ஒரு கனவு இன்று நினைவாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற நாளில் கரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா மிகவும் முடங்கி போய் இருந்தது.
சாகச சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை சுற்றுலாவில் புகுத்த உள்ளோம். தற்போது சுற்றுலாவை மேம்படுத்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருக்கிறது. அறிவிக்கப்பட்ட பல்வேறு சுற்றுலா திட்டங்கள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் சொகுசு கப்பலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அடுத்த 4 மாதங்களுக்கு சொகுசு கப்பல் பயணம் வெற்றிகரமாக அமையும். இதற்கு அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தன்னைத் தானே திருமணம் செய்வதில் சிக்கல்.. ஆதார் பெயரில் குளறுபடி?