லெனின் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவன தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கூத்தகுடி சண்முகம் (92) உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், " முதுபெரும் பொதுவுடைமை இயக்கப் போராளியும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கூத்தகுடி சண்முகத்தின் மறைவு பேரிழப்பாகும். மருது சகோதரர்கள் வழிவந்தவரான சண்முகம் சளைக்காத போராளி.
பொதுநலனுக்காக, 23 முறை சிறைச்சென்ற தியாகி. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தவர். சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும், அவர் ஆற்றிய பணிகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும்.
கூத்தகுடி சண்முகத்தின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், இயக்கத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக சார்பில் தங்க கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி