சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.
இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா, உச்சபுளியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் செந்தில்குமார், மண்டபத்தைச் சேர்ந்த சாம் ஆகிய நான்கு பேர் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது, அவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கைக் கடற்படையின் இரண்டு படகுகள் சீறிப் பாய்ந்து வந்து, இவர்களது படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், படகு மூழ்கத் தொடங்கியது. அந்தப் படகில் இருந்த மீனவர்கள் வாக்கி டாக்கியில் எழுப்பிய அலறல் குரல், மற்ற படகில் இருந்த மீனவர்களுக்குக் கேட்டதாக கூறப்படுகிறது.
நேற்று (ஜன. 19) காலையிலேயே கரை திரும்ப வேண்டியவர்கள், இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை. எனவே, மீனவர்களைத் தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளனர். ஆனால் இதுவரை மீணவர்கள் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், மீனவர்களை தாங்கள் சிறைபிடிக்கவில்லை என இலங்கை கடற்படையினரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை இந்தியக் கடற்படையினரும் காப்பாற்றவில்லை. கடந்த வாரம் இலங்கைக்குச் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கே சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
ஆனால், இனி மீனவர்களை விடுதலை செய்வதற்கான தேவை இல்லை. ஏனெனில் மீனவர்களை கைது செய்யாமல் அவர்களை கடலுக்குள் மூழ்கடித்து விடுவோம் என்று இலங்கை காட்டியுள்ளது. பாகிஸ்தான் மீது கொலைவெறி கோபம் காட்டுகின்ற இந்தியா, தமிழ்நாட்டு மீனவர்களைக் கொன்று குவிக்கின்ற இலங்கையின் சிங்கள இனவெறி அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுக்கின்றது. இதன் மூலம் தாங்களும் தமிழர்களுக்கு எதிரிதான் என்பதைக் காட்டுகின்றது.
காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன என்பதை, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இலங்கை தூதரகம் முற்றுகை! - வைகோ கைது!