சென்னை: சென்னையில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்குச் செல்லும் அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம் இன்று(ஜூலை 28) காலை 10:05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளுக்கு சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர்.
அங்கு, இலங்கையைச் சேர்ந்த சிவகஜன்லிட்டி (43) என்ற பெண் பயணியும் பாதுகாப்பு சோதனை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, சிவகஜன்லிட்டி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் விமான நிலைய மருத்துவக் குழுவினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், மயங்கி விழுந்த பெண் பயணியைப் பரிசோதித்தனர். அதில், அவர் உயிரிழந்துவிட்டார் எனத் தெரியவந்தது. மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து பெண் பயணியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு 174 பிரிவில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவருடைய உடலை, இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
முதற்கட்ட விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த இந்தப் பெண் பயணி திருமணம் ஆகாதவர் என்றும், ஆன்மிக சுற்றுலாவாக இந்தியாவிற்கு வந்தார் என்றும் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு சுற்றுலா விசாவில் ஆன்மிகப் பயணமாக வந்திருந்த இவர், சொந்த நாட்டுக்கு திரும்புவதற்காக விமான நிலையம் சென்றபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார்.
இந்தச் சம்பவம் காரணமாக, காலை 10:05 மணிக்கு யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய அலைன்ஸ் ஏர் பயணிகள் விமானம், ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11:06 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. முன்னதாக கடந்த ஜூன் 29ஆம் தேதி, திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் புறப்பட இருந்த கிருஷ்ணன் என்ற பயணி உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அடுத்த நாள் உயிரிழந்துவிட்டார்.
இதையும் படிங்க: Airbus Beluga: மீண்டும் சென்னை வந்த 'ஏர்பஸ் பெலுகா' விமானம்: காரணம் என்ன?