இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் உயர் கல்வித் துறை கொண்டுவந்த தீர்மானத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, சீர்மிகு அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என கொண்டுவருவதற்கு ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆலோசனையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு சிறப்புத் தகுதி வழங்கினால் ஏற்கனவே தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் வராது என மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இட ஒதுக்கீடு குறித்தும், அண்ணா பல்கலைக்கழகத்தை குறைப்பது குறித்தும் அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து முடிவெடுக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்ட முடிவில் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு தமிழ்நாடு அரசு எழுதிய கடிதத்திற்கு 12ஆம் தேதி மத்திய அரசு அளித்த பதிலில், ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள இடஒதுக்கீட்டு முறைக்கு சீர்மிகு சிறப்புத் தகுதி வழங்கினால் பாதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
![anna-university](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5401656_hh.jpg)
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது குறித்து அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது குறித்த குழுவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் அரசு சார்பில் நிதித் துறை முதன்மைச் செயலர், சட்டத் துறை செயலர், உயர் கல்வித் துறைச் செயலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் எனக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.