சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவான வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவினர் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையின் நகல்களை கேட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அக்.30 ஆம் தேதிக்கு நீதிபதி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் முன்னதாக அதிமுக ஆட்சியின் போது, 2011-16ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பதவி பணி நியமனங்கள் பெற்று தருவதாகக்கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பணி நியமனங்களுக்கு பணம் பெற்று மோசடி செய்தது, ஏமாற்றுதல், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் ஒரு வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தும், மற்ற வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக விசாரணை நடத்த உத்தரவிட்டதை ரத்து செய்து, அனைத்து வழக்குகளிலும் விசாரணையை முடித்து, இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி விசாரணையை தொடர்ந்த காவல்துறை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதனையடுத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை கேட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று (அக்.25) நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அக்டோபர் 30ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெளிநாட்டு நாயை இறக்குமதி செய்யலாமா? - உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மத்திய அரசு..!