கரோனா ஊரடங்கு காரணமாக ரயில் போக்குவரத்து குறைந்து, ரயில்வே துறைக்கு வருவாய் குறைந்துள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் தென்னக ரயில்வே நிர்வாகம் சரக்கு, பார்சல் சேவைகளை விரிவுபடுத்தி அதன் வாயிலாக கூடுதல் வருவாயை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில், கரோனா தொற்று இரண்டாம் அலை, பொது முடக்கத்தால் பல சவால்கள் ஏற்பட்டாலும், அதனை மீறி தென்னக ரயில்வே மேற்கொண்ட முயற்சியால் ரயில் மூலமாக பார்சல் வகைகள் எடுத்துச் செல்லப்படுவது அதிகரித்துள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தென்னக ரயில்வேயின் சரக்கு, பார்சல் சேவைகள் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 52.89 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.427.35 கோடி, பார்சல் சேவை மூலம் ரூ.14.92 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.