கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரயில், பேருந்து என, பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டன.வெளிமாநிலங்களில் தவித்த புலம் பெயர் தொழிலாளர்கள் வசதிக்காக, ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் மே 1ஆம் தேதி முதல் இயக்கப்பட்டன.
ஊரடங்கில் கொண்டுவரப்பட்ட தளர்வுக்குப் பின்னர், புதிதாக 230 ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கூடுதலாக 80 ரயில்கள் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் இயக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 300 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் படிப்படியாக இயங்கத் தொடங்கின.
இந்த நிலையில், துர்கா பூஜை, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதுரை, கோயம்புத்தூர், டெல்லி, சந்த்ரகாச்சி ஆகிய நகரங்களுக்கும், கன்னியாகுமரியில் இருந்து ஹவுராவுக்கும், திருவனந்தபுரத்திலிருந்து ஷாலிமாருக்கும் வரும் 19ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு நாளை(அக்.15) காலை 8 மணி முதல் தொடங்கும் என, அந்த அறிவிப்பில் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...சுஷாந்த் சிங் உறவினருக்கு சீட் கொடுக்கும் பாஜக: எதிர்க்கட்சிகளை வீழ்த்த வியூகம்!