சென்னை: நந்தனம் மூப்பனார் மேம்பாலம் அருகே 96 சென்டில் நியூ டவர் என்ற பெயரில் புதியதாக 17 அடுக்குமாடிகள் கொண்ட 102 வீடுகள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, ’நியூ டவர் என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணிகள் 90 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 10 சதவிகிதப் பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு வீடுகள் வாங்கியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
1300 சதுர அடி முதல் 1600 சதுர அடி வரையில் கட்டப்பட்டுள்ள இந்த ஒவ்வொரு வீடும் 1 கோடியே 38 லட்சம் முதல் 1 கோடியே 50 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட 61 இடங்களில் உள்ள வாடகை குடியிருப்புகள் பழுதடைந்து உள்ளதாகவும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு அதிக வீடுகள் கொண்ட நவீன மாடி குடியிருப்புகளாக தற்போதைக்கு ஏற்ற வகையில் கட்டித்தரப்படும்.
இதே போல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டு விற்பனை ஆகாமல் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை விற்பனை செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு மட்டுமின்றி, இனிவரும் காலங்களில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்படும் வீடுகள் விற்பனை செய்யாமல் இருக்காத வகையில் கட்டப்படும்.
மேலும் அனைத்து வீடுகளும் விற்கப்படும் நிலையை உருவாக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்’ என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூகுள் தேடலில் ஹிட் அடித்த ஃபிஃபா இறுதிப்போட்டி - ட்ராஃபிக்கால் ஸ்தம்பித்த கூகுள்!