கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுப்படுவதை தவிர்க்க மேம்பாலங்கள் இரவு நேரங்களில் மூடப்பட்டுவருகிறது.
இருப்பினும் இளைஞர்கள் சிலர் காவலர்கள் இல்லாத இடத்தை தேர்வு செய்து பைக் ரேசில் ஈடுப்படுகின்றனர். இந்நிலையில் சென்னை வடபழனி, ஆற்காடு சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஈக்காட்டுதாங்கல் சிக்னல் வழியாக வேகமாக பைக்கில் சென்றுகொண்டிருந்த மூன்று சிறுவர்கள் உள்பட ஆறு இளைஞர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கிண்டி காவல்துறையினர் துரத்தி சென்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில், வடபழனியில் நண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு, கும்பலாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.