சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இதனடிப்படையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூன்று புகார்கள் வந்ததை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
![Sivasankar baba](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12486187-thumbnail-3x2-yua_0208newsroom_1627886023_88.jpg)
தொடர்ந்து இந்த வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன. சிபிசிஐடி காவலர்கள் இந்த விவகாரத்தில் டெல்லி சென்று சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். மேலும் சிவசங்கர் பாபாவின் பக்தையான சுஸ்மிதா என்பவரையும் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள், பக்தர்கள் ஆகியோர் கைது நடவடிக்கையில் சிக்காமல் இருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
சிவசங்கர் பாபா மீது போடப்பட்ட மூன்று வழக்குகளில் ஏற்கனவே இரண்டு போக்சோ வழக்குகளில் சிபிசிஐடி காவலர்கள் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
![Sivasankar baba](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-sivasangarbaba-3rdpocsoarrest-photo-script-7208368_02082021120128_0208f_1627885888_1041.jpg)
முன்னதாக செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஜூலை 22ஆம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சிவசங்கர் பாபா மீது மூன்றாவதாக பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்த வழக்கை சிபிசிஐடி காவலர்கள் விசாரித்ததில், புகார்தாரர் பள்ளி மாணவியாக இருந்தபோது பாபா அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதனையடுத்து மூன்றாவது வழக்கையும் போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்து, இன்று (ஆக.02) அவரைக் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: ’தங்கப் பதக்கம் வென்று வாருங்கள்’ - மகளிர் ஹாக்கி அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து