சென்னை: சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ள ஓ மை டாக் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் இன்று (ஏப் 15) வெளியானது. இப்படத்தில், நடிகர் விஜயகுமார், அருண் விஜய் , ஆர்ணவ் விஜய் என மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தென்னிந்தியாவிலேயே மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும். இதில் மகிமா நம்பியார், அருண் விஜய்க்கு மனைவியாக நடித்துள்ளார்.
சரோ சண்முகம் இயக்கியுள்ள இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். சிம்பா என்ற நாய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. இன்று நடைபெற்ற இவ்விழாவில் நடிகர் சிவக்குமார், விஜயகுமார், அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய இயக்குநர் சரோவ் சண்முகம், “அருண் விஜய் சம்மதிக்காவிட்டால் இப்படம் சாத்தியமில்லை. சூர்யாவுக்கு நன்றி. உணர்வுப்பூர்வமாக மட்டும் இல்லாமல் கமர்ஷியலாகவும் இதனை உருவாக்கியுள்ளோம். இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது ஆர்ணவ்வுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
இவரைத்தொடர்ந்து பேசிய சிவக்குமார், “விஜயகுமாரும் நானும் 55 ஆண்டுகால நண்பர்கள். எனக்கு முன்பே முருகன் வேடம் போட்டவர். இவரது சிவக்குமார் என்ற பேரை எனக்காக விஜயகுமார் என்று மாற்றிக்கொண்டார். இருவரும் இணைந்து சில படங்களில் நடித்தோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சிறுவயதில் சூர்யாவுக்கு நான்கு வார்த்தை கூட பேசத் தெரியாது. சூர்யா என்னவாகப்போறான என்ற பயம் எனக்கும் எனது மனைவிக்கும் இருந்தது. சூர்யாவுக்கு ஆங்கிலம் என்றாலே ஆகாது. அவனது பள்ளி அட்மிஷனுக்காக வெயிலில் வரிசையில் நின்று சீட் வாங்கினேன். அதனை கண்ட சூர்யா கதறி அழுதான். உங்களை வெயிலில் நிற்க வைத்த பள்ளிக்கு போகமாட்டேன் என்றான்.
பின்னர் கல்லூரியில் அட்மிஷன் தருவதில் சிக்கல். எப்படியோ தட்டுத் தடுமாறி படிப்பை முடித்து விட்டார். சினிமாக்கு வர ஆசையில்லாமல் கார்மெண்ட் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இயக்குநர் வசந்த் மூலமா சினிமாக்குள் புகுந்தார். முதல் படத்தில், நடிப்பில் சொதப்பியதாக விமர்சனங்கள் எழுந்தன.
சூர்யா திரைத்துறை வாழ்க்கையிலேயே உச்சம் தொட்ட படம் ஜெய்பீம். ஜெய்பீம் படத்தைப் பார்த்து தமிழக அரசு இருளர் மக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு பட்டா வழங்கியது. இது தமிழ்நாடு அரசு வரலாற்றிலேயே நடக்காத விஷயம். ஆனால் இப்போ இந்த அளவுக்கு நடிப்பார் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த வளர்ச்சி என்னை ரொம்ப பெருமைப்படுத்தியுள்ளது என” கலங்கியவாறு கூறினார்.
பின்னர் விஜயகுமார் பேசுகையில், “விஜய் உங்களுடைய அன்பால் பாராட்டால் இன்று முன்னணி நடிகராக உள்ளார். ஆர்ணவ் விஜய் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வந்து ஒரு சூப்பர்ஸ்டாராக வர வாழ்த்துகள்” என்றார். தொடர்ந்து அருண் விஜய் பேசுகையில், “ஆர்ணவ் விஜய்க்கு இப்படி ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நன்றி. இது எதேச்சையாகக் கிடைத்த வாய்ப்பு. இதனைத் தவறவிடக்கூடாது என நினைத்தேன். முதல் படத்திலேயே தாத்தாவுடன் நடித்தது பெரிய பாக்கியம்” என்றார்.
இதையும் படிங்க: கேஜிஎஃப் படத்துடன் பீஸ்ட்டை ஒப்பிட வேண்டாம் - நடிகர் கூல் சுரேஷ்!