சென்னை: நவராத்திரியினை அடுத்து இன்று (அக் 5) விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கல்வியைத் தொடங்கினால் குழந்தைகள் நன்றாக கல்வி பயில்வார்கள் எனவும், வெற்றிகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையிலும் கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், தேசிய விருது பெற்ற பிரபல பின்னணிப் பாடகி பி.சுசிலா கலந்து கொண்டு நெல்மணியை வைத்து குழந்தைகளின் விரலைப் பிடித்து உயிரெழுத்துக்களை எழுத வைத்தார். அதேபோல் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, குழந்தைகளின் கைகளைப் பிடித்து முதல் எழுத்தை எழுதி கல்வியைத் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, 'விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசிரியராக எனது பணியை செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
தோல்வி என்ற பாடத்தை கற்காமல் மாணவர்கள் வெற்றியை சுவைக்க முடியாது. தோல்விகள் கற்றுத்தரும் பாடத்தை வெற்றிகள் கற்றுத்தருவதில்லை. எனது வாழ்விலும் தோல்விகளைச் சந்தித்துள்ளேன். இன்று எழுதத் தொடங்கியுள்ள பிள்ளைகள், எதிர்வரும் காலங்களில் ஐஐடி மாணவர்களாக வர வேண்டும்' என ஆசிர்வதித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பின்னணிப்பாடசி பி.சுசிலா, 'விஜயதசமி நாளில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது' எனக்கூறினார். மேலும் சில பாடல்களையும் சுசிலா பாடினார்.
இதையும் படிங்க: தசராவுக்கு ‘நோ’ சொல்லும் உ.பி. கிராமம் - காரணம் ராவணன்?