சென்னை:Manikka Vinayagam: இசையமைப்பாளராகவும், பின்னணிப் பாடகராகவும், சிறந்த நடிகராகவும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர், பல விருதுகளுக்குச் சொந்தக்காரர், மாணிக்க விநாயகம்.
உலகம் போற்றிய பரதநாட்டிய கலைஞர் வழுவூர் ராமையா பிள்ளையின் மகனும் பின்னணிப்பாடகருமான மாணிக்க விநாயகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 26) காலமானார். அவருக்கு வயது 73.
இவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்தப் பேட்டியில், "எனக்கு ஏழு வயது இருக்கும்போது என்னோட மாமாவும், குருவுமான இசைமேதை சிதம்பரப்பிள்ளையிடம் சங்கீதம் கத்துக்கிட்டேன். இது தவிர குடும்பக்கலையுமான பரத நாட்டியத்தையும் கற்றுக் கொண்டேன்.
பின்னர் இசையின் மீது கொண்ட ஈர்ப்பால் 1980-களில் ஒரு வானொலியில் இசையமைப்பாளராகச் சேர்ந்து சென்னையிலுள்ள தொலைக்காட்சிகள், வானொலிகளில் பல நூறு பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.
இசைத்தொண்டாற்றிய மாணிக்க விநாயகம்
சில காலங்களில் கேசட்களில் பக்திப் பாடல்கள், காதல் பாடல்கள், தேவாரங்கள், திருப்புராணங்கள் போன்றவற்றிற்கு இசையமைத்து உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளேன்.
அதுமட்டுமின்றி எனது இசையில் பழைய பாடகர்களில் இருந்து தற்போது உள்ள பாடகர்கள் வரை பல பாடகர்கள் பாடியுள்ளனர். இதுவரையில் 15,000 பாடல்களுக்கும் மேல் இசையமைத்துப் பாடியிருக்கிறேன். இதற்காக தமிழ்நாடு அரசு 2003ஆம் ஆண்டு ‘கலைமாமணி’ விருது கொடுத்தது. 2008இல் கலைஞர் கருணாநிதி ‘இசைமேதை’ என்ற பட்டம் கொடுத்தார்.
ஈழத்தமிழ் மக்களுக்கானப்பாடலைப் பாடியிருந்த மாணிக்க விநாயகம்
எனது பாடல்களை கேட்ட வித்யாசாகர், ‘தில்’ படத்தில் முதன் முதலாக நடிகர் விக்ரமுக்காக பாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அதில், ‘கண்ணுக்குள்ள கெளுத்தி’ என்ற பாடல் தனக்குப் பெரும் புகழையும் வெற்றியையும் தேடித்தந்ததாகவும் அதற்குப்பின் வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், யுவன் சங்கர் ராஜா இப்படிப்பட்ட எல்லா இசையமைப்பாளர்களிடமும் பல வெற்றிப் பாடல்களைப் பாட சந்தர்ப்பம் கிடைத்தது” என்று தெரிவித்திருந்தார்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'விடை கொடு எங்கள் நாடே' பாடல் இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது ஈழத்தமிழ் மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய மரியாதையைப் பெற்றுக் கொடுத்தது.