சென்னை: உலக நாடுகள் மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அனைத்து பெரு நகரங்களும் காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னைக்கான காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின்படி கடல் மட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 செ.மீ உயரும். இதனால் சென்னையில் 300 அடி கடற்கரை பகுதிகள் நீருக்குள் மூழ்கிவிடும். அடுத்த 100 ஆண்டுகளில் பேருந்து நிறுத்தங்கள், புதிதாக அமைக்கப்படும் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள், புறநகர் மின்சார ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும் என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை 2005ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட ‘சி40 மேயர்கள்’ அமைப்பு தயார் செய்துள்ளது. இதற்கு முன்பாக பல்வேறு அரசு துறைகள், காலநிலை மாற்றம் தொடர்பாக செயல்படும் அமைப்புகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதன்படி "நெகழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை" என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6 முக்கிய பிரிவுகளுடன் இந்த செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கான காலநிலை மாற்ற வரைவு செயல் திட்டம் குறித்து மக்கள் கருத்துகேட்க மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. "நெகழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை" திட்டத்தில் உள்ள அம்சங்கள் பின்வருமாறு.
புதுப்பிக்கதக்க மின்சாரம் - 8 இலக்குகள்
- 2050ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பயன்பாடு.
- 2050ஆம் ஆண்டுக்குள் அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக புதுப்பிக்க தக்க எரிசக்தி உற்பத்தி.
- வீடுகளில் சோலார் மின் உற்பத்தி பயன்பாட்டை அதிகரிப்பது.
- குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தல்.
கட்டுமானங்கள் - 8 இலக்குகள்
- அனைத்து கட்டடங்களையும் குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைப்பது.
- இதுதொடர்பாக விழிப்புணர்வு, அறிவுரைகளை வழங்குவது.
போக்குவரத்து - 10 இலக்குகள்
- 2050ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்சார பேருந்துகள்
- 80 சதவீத பயணங்களை பொது போக்குவரத்து, நடப்பது, சைக்கிள் மூலம் மேற்கொள்ளும் வகையில் திட்டங்கள் செயல்படுத்துவது
- எந்திர வாகனம் இல்லாத போக்குவரத் திட்டத்தை செயல்படுத்துவது
திடக் கழிவு மேலாண்மை - 11 இலக்குகள்
- கழிவுகளை 100 சதவீதம் தரம் பிரித்து அளிப்பது
- கழிவுகள் மறு சுழற்சி செய்யும் வசதிகளை அதிகரிப்பது
வெள்ள மேலாண்மை - 17 இலக்குகள்
- வெள்ள தடுப்புக்கு ஏற்ற வகையில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்துவது
- நீர் வள பாதுகாப்பு மேலாண்மை
- பேரிடர் பாதிப்பு குறைக்கும் திட்டங்களை செயல்படுத்துவது
எளிதில் பாதிக்கப்படும் மக்கள் மற்றும் சுகாதாரம் - 12 இலக்குகள்
- மக்களுக்கு காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் வகையிலான வீடுகள்
- காலநிலை மாற்றத்தால் சுகாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு
பொதுமக்கள் அக்டோபர் 26ஆம் தேதிக்குள் இந்த அறிக்கை தொடர்பான கருத்துகளை chennaiclimateactionplan@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தெரிவிக்கலாம்
இதையும் படிங்க: சென்னை மாநகர வளர்ச்சிக்கான மூன்றாம் முழுமை திட்டம் தொடக்கம்